பரிட்சைக்கு நேரமாச்சு
மணி ராத்திரி 10 ஆகிடுச்சு. நாளைக்கு 8 மணிக்கு கிளம்பினாத்தான் பரிட்சைக்கு சரியான நேரத்துக்கு போக முடியும்.
ஆனா இன்னும் படிக்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கு. ஏதோ சொத்து சேத்து வைக்கறா மாதிரி சேத்து வச்சிருக்கேன் எல்லாத்தயும் கடைசி நிமிஷத்துல படிக்க. இன்னும் படிக்க நிறைய இருக்கேன்னு யோசிச்சி யோசிச்சே இன்னும் கொஞ்ச நேரத்த வீணடிச்சேன். கடைசீல அந்த பதட்டத்தோடயே பரிட்சைக்கும் கிளம்பிட்டேன். இன்னும் ஒரு 30 நிமிஷம் இருக்கு அதுல இத படிக்கலாமா இல்ல அத படிக்கலாமான்னு கடைசீல ஒண்ணும் படிக்கல. சரியா 9 மணிக்கு மணி அடிச்சதும் உள்ள நுழைஞ்சுட்டேன். உள்ள போனா நா கொண்டு போன பையில hall ticket தவிர மீதி எல்லா குப்பையும் இருக்கு. எப்பவோ தொலைஞ்சி போன திருகாணி கூட கிடைச்சுது ஆனா அதுக்கு சந்தோஷப்பட கூட முடியாம இந்த டென்ஷன். என்ன செய்யலாம்னு கண்ணு கலங்கி நின்னா வேர்த்து விருவிருக்க அப்பா நிக்கறார் அவர் கையில hall ticket
ஒரு சின்ன அர்ச்சனை செய்துட்டு கூடவே நல்லா எழுதி தொலைனு!! வாழ்த்திட்டு போனாரு.
இந்த கூத்தெல்லாம் முடிய ஒரு 30 நிமிஷம்.சரின்னு மனச தேத்திக்கிட்டு கேள்வித்தாள பாத்தா அதுக்கும் நமக்கும் ஒரு சம்மந்தமும் இல்லங்கர மாதிரி இருக்கு. அந்த சோகத்துல இன்னும் ஒரு ஒரு மணி நேரம் ஓட கடைசி பக்கத்த பாத்தா நமக்கு தெரிஞ்ச ஒரு நாலு கேள்வி சந்தோஷம் தாங்கல உடனே பக்கம் பக்கமா முதல் கேள்வி எழுதி முடிக்கறேன் அதுக்குள்ள மணி அடிக்க ஐயோ நாம ஒரு கேள்விதானே முடிச்சோம்னு நா அழ ஆரம்பிக்க.....
ஏண்டி சாயங்காலம் தூங்கறதே தப்பு இதுல உனக்கு கனவு வேறயா....எந்திரி அஞ்சலி எந்திரி அஞ்சலின்னு மணிரத்னம் ஸ்டைல்ல அம்மா எழுப்ப ஓ எல்லாம் வெறும் கனவான்னு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் எனக்கு எப்ப பரிட்சை இருந்தாலும் இந்த கனவு கரெக்ட்டா அட்டெண்டன்ஸ் குடுத்துடும் சில சமயம் இந்த கனவ வெச்சிதான் எனக்கு பரிட்சை இருக்குங்கறதெ நியாபகத்துக்கு வரும்னா பாத்துக்கோங்க.
சரி சரி..இப்ப என்ன பரிட்சைன்னு தானே கேக்கரிங்க...எல்லாம் சம்பாதிக்கற கொழுப்புல சேந்த MBA தாங்க.
இந்த பரிட்சை வந்தா ஒரு சந்தோஷம் என்னன்னா வீட்ல ராஜ மரியாதை கிடைக்கும் ஒரு வேலை செய்ய வேண்டாம்.(இல்லன்னா மட்டும் எதுவும் செய்திரப்போரதுல்ல...ஆனா இந்த சமயத்துல ஒரு குற்ற உணர்வு கூட இருக்காது பாருங்க)
இதுல இன்னொரு வசதி என்னன்னா ஒரு காலத்துல என்னை திட்டணும்னு எங்க அம்மா முடிவெடுத்தாங்கன்னா அது இப்படித்தான் இருக்கும்..படிடீ படிடீ படீ..ஆனா இப்ப நாமளே புத்தகம் எடுத்தா கூட ஏம்மா இப்பதானே ஆஃபீஸ்லேந்து வந்த கொஞ்சம் ஓய்வெடுனு சொல்றாங்க (அவங்களுக்கு எப்படி தெரியும் நம்ம கைல இருக்கறது MBA புத்தகம் இல்ல..பாரதியார் கவிதைகள்னு)
இந்த விகடனோ இல்ல ஏதாவது ஒரு தமிழோ இல்ல ஆங்கில நாவலோ கையில இருந்தா அது படிச்சி முடிக்கறவரைக்கும் தூக்கத்துக்கும் நமக்கும் ஒரு சம்மந்தமும் இருக்காது. ஆனா பாருங்க இந்த பாடம் சம்மந்தமா எந்த புத்தகத்த எடுத்தாலும் தூக்கம் அப்படியே கண்ண சுழட்டும்...
இப்பதாங்க கைல புத்தகத்த எடுத்தேன் ஒரே தூக்கம் தூக்கமா வருது..அம்மா கையால ஒரு காபி சாப்பிட்டு படிக்க ஆரம்பிக்கணும். அதனால இத்தோட என் அறுவைய முடிச்சிக்கறேன்.