கொலு வைக்கலையோ கொலு
______________________
நவராத்திரி என்றாலே ஒரு பெரிய சந்தோஷம். ஏன்னு கேக்கரீங்களா? இந்த ஒரு பண்டிகையத்தான் ஒன்பது நாள் கொண்டாடலாம். என் புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் கிடையாது. ஆனாலும் என் பிறந்த வீட்டில் இந்த பழக்கம் உண்டு என்பதால் திருமணத்திற்கு பின்னும் கொலு வைப்பதை நான் நிறுத்தவில்லை. என் மாமியாருக்கும் கொலு வைப்பது பிடித்திருந்ததால் ஒரே கொண்டாட்டம்தான்.

இப்ப நாங்க சிங்கைல இருப்பதாலே விமரிசையா ஒன்பது படி வைக்காட்டியும் இந்த முறை சற்று சிறியதாக வைத்துவிட்டோம்.

சரி அது இருக்கட்டும் இந்த கொலு வைக்கற சாக்கில் வீட்ல ஒரு களேபரம் நடக்கும் பாருங்க...அத பத்திதான் அடுத்து எழுதப்போரேன்.


இப்போதைக்கு அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்

ஆசிரிய தின வாழ்த்துக்கள்


எல்லோருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

வரும் தலைமுறையினர் இது போன்றதொரு ஆசிரியரை பார்க்காதிருக்கட்டும்.

இதைப் பார்த்த உடன், என் நண்பனது பதிவு ஒன்று ஞாபகம் வந்தது. அவர் இந்த மாதிரி நல்லாசிரியர்களிடம் மாட்டாம போயிட்டாரேன்ற ஒரே ஒரு குறை இருக்கு ;)

நண்பர பதிவுலகின் பக்கம் பாத்தே பல வருஷம் ஆச்சு... நட்சத்திரமானாத்தான் எழுத வர்றதுன்னு என்ன மாதிரியே எதுவும் விரதமா ;)

Labels:

நீங்களே சொல்லுங்க இது நெசமா?


என்னுடைய நண்பனொருவனுக்கு இன்று பிறந்தநாள். அவன அப்டி இப்டி திட்டி தாஜா பண்ணி ட்ரீட் கொடுக்க சொல்லி நட்சத்திர ரொட்டி (bucks க்கு ரொட்டின்னு ஒரு அர்த்தம் இருக்கு தெரியுமா? காசு-னு வச்சுக்கிட்டா கூட பெயர் பொருத்தம்தான்) காஃபிக்கடைக்கு கூட்டிட்டு போனேன்.

அங்க போய் ஆளுக்கொரு ஆளுயர கோப்பைல காஃபி சொல்லிட்டு வழக்கம் போல மாமியார்-மாமனார் பண்ற லொள்ளு, என் பொண்ணு படுத்துற பாடு, என் கணவன் பண்ணின அட்டூழியங்கள்னு சொந்தக் கதை சோகக் கதையா சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்ப அவன் சடார்னு ஒரு கருத்த சொல்லிட்டுப் போயிட்டான். இத்தனைக்கும் புலம்பும்போதும் அவங்கள பத்தி உள்ள நல்லதெல்லாம் சொல்லி புலம்பற ஆளுங்க நான்.

ஏண்டான்னு கேட்டா பெரிசா ஒரு விளக்கம் வேற குடுத்தான். அவன் சொல்றதுல உண்மை இருக்கான்னு உங்ககிட்ட கேக்காம வேற யார்ட்ட கேக்றது. நீங்களே சொல்லுங்க 'கல்யாணமான பின்னால ஆண்-பெண் நட்பு விட்டுப் போறதுக்கு இல்ல சின்ன விரிசல் விழறதுக்கு இந்தப் புலம்பலா காரணம்'?

அவன் என்ன விளக்கம் கொடுத்தான்னு கேக்கறீங்களா?

நானும் இதே அட்டூழியங்கள்லாம் என் மனைவிகிட்ட செய்றேன், எங்க வீட்லயும் இதே பிரச்னை பல ரூபங்கள்ல அலைஞ்சுகிட்டு இருக்கு. அதுனால உன் கதைய கேட்டா ஏதோ எந்'தங்கமணி'யே உன்கிட்ட புலம்பி அவருக்கு கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்கன்னு சொல்லி நீ புத்தி சொல்ற மாதிரியே இருக்குன்றான்!

நீங்களே சொல்லுங்க இது நெசமா?

இனிது இனிது


முதலில் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

இன்று காலையில் இருந்தே எங்கள் வீட்டில் பட்டிமண்டபம்தான்...
என் கணவர் தெலுங்கு..நான் தமிழ்....அதனால் விநாயக சதுர்த்திக்காக தமிழ் பாடல் போடுவதா...தெலுங்கு பாடல் போடுவதா..என ஒரு சிறு ஊடல்...

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..என நானும்...

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என என் கணவர்...

தமிழ் இனிதா...தெலுங்கு இனிதா...என்று நாங்கள் பேசிகொண்டிருக்க....

என் ஒரு வயதே நிரம்பிய மகள்...அம்மா..என்று குரல் குடுக்க...

அந்த மழலையின் குரல் கேட்ட பின்னர்..ஊடலாவது ஒண்ணாவது...

இதைத்தான் சொன்னாரோ வள்ளுவர்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்"

தீ நகர்



ஹாய் மதன்: கேள்வி பதில்
விக்கிரமாதித்தன், ஜேடர்பாளையம்.
இந்தியாவில் உள்ள பெரிய குறை என்ன?
மக்களின் அசாத்தியப் பொறுமை!

நான் சொல்ல வந்த செய்தி என்னமோ மேலேயே முடிந்து விட்டது. இருந்தாலும் சமூக அக்கறை உள்ள இரண்டே இரண்டு பெயர்களை குறிப்பிட்டாக வேண்டுமென்ற ஒரே நோக்கில்...

எம்.ஏ.ஜவஹர் இதே தலைப்பில்,ஜூனியர் விகடனில் கோபசாரியின் டைரியிலிருந்து என்ற பகுதியில் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வழக்கம் போல் செவிடம் காதில் ஊதிய சங்கானது. நெருப்புன்னா வாய் வெந்துராது என்பார்கள்... ஆனால் அன்னைக்கு நெருப்புன்னு சொன்னது இன்னிக்கு வெந்து தணிஞ்சுருக்கு!

அடுத்ததா டிராஃபிக் ராமசாமி, சமீபத்தில கருணாநிதிய எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போனாரே அவர்தான், அவரும் இது விஷயமா ஒரு வழக்கு போட்டாரு. அது தலைல கல்லப் போடு இல்ல கமிஷனப் போடுன்ற பாணியில அந்த வழக்கு இன்னும் தூங்குது!

பி.கு: மேலே சொன்ன விகடன் முகவரி எடுப்பதற்காக போனால் ஓடும் வரிச் செய்தியில் கீழ் கண்ட வாசகம்...

சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து: விதிமுறைகளின்படி கட்டியிருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது:முதலமைச்சர் கருணாநிதி கருத்து

தலைல அடிச்சுக்கிட்டேன்... என் கேள்வியெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் முதலமைச்சர் கருத்தின் அடிப்படையில் உங்களுக்கு இழப்பீடு கிடையாது என்று இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லுமா? ஒருவேளை மேலே இரண்டு பேர் செய்ய நினைத்ததை இது செய்யலாம்!

அது சரி... நாம் மெய்யாலுமே அசாத்தியப் பொறுமைசாலிங்கதானோ...