முதல் முதலாய்...

முதல் முதலாய்...(1)
Photobucket - Video and Image Hosting

இது கண்டிப்பா லேசா லேசா பாட்டு இல்லீங்க.
முதல் முதலாய் நிகழும் சில அனுபவங்கள் மறக்க முடியாதவை...
முதல் முதலா மேடைல பேசின அனுபவம்தான் இது.


அப்ப 6வது படிச்சிட்டு இருந்தேன். அது வரைக்கும் பேச்சு போட்டில எல்லாம் சேந்ததே கிடையாது. புது பள்ளிகூடம் வேற.ஸ்கூலுக்கு போகும்போதே அம்மாவோட அறிவுரை..பாருமா நல்ல படிச்சா மட்டும் போதாது எல்லா போட்டியிலும் சேரணும் நிறைய பரிசு வாங்க்கணும்னு. அதுக்கு ஏத்த மாதிரி பல பள்ளி மாணவர்களும் கலந்துக்கர ஒரு பேச்சு போட்டில முதல் ஆளா பேர குடுத்துட்டேன். போட்டி வர்ற சண்டே அதுவும் பத்மா சேஷாத்ரிலன்னு சொன்னாங்க.தலைப்பு - என்னை கவர்ந்த குறள்.
வீட்டுக்கு போனதும் அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா..எல்லார் கிட்டயும் இத பத்தி பெருமையா சொல்லிட்டேன்.
சரி இப்ப எனக்கு யாரு எழுதி தரப்போறிங்க..
உனக்கு பிடிச்ச குறள்னுதானே தலைப்பு..அப்ப நீதானெ எழுதணும் என்று இந்த ஒரு விஷயத்தில் குடும்பமே ஒத்துமையாய் இருக்க வேறு வழியில்லாமல் தமிழ் ஆசிரியை அன்றைய வகுப்பில் எடுத்த அன்புடைமையில் எனக்கு பிடித்த ஒரு குறளை பற்றி எழுதி படித்தும் விட்டேன். பின்னர் தினமும் கண்ணாடி முன் நின்று பேசிப்பாத்து ஒரே கொண்டாட்டம்தான்.
கடைசியில் அந்த பொன்நாளும் வந்தது.


நான் என்ன சொல்லியும் கேக்காமல் முதல் தடவ மேடையில பேச போற அதனால பட்டு பாவாடை சட்டைதான் போடணும்னு சொல்லி...கிட்டதட்ட ஒரு நடனப் போட்டி போற மாதிரி தயாரானேன்.
அப்பா நீங்க என்னை பள்ளியில விட்டுட்டு போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சி திரும்பி வந்து கூட்டிட்டு போங்க என்றேன்.
போடி முதல் தடவ மேடைல பேச போற நான் அப்பா ரெண்டு பேரும் வந்து நீ பேசி முடிக்கரவரைக்கும் இருந்து உன்னை கூட்டிட்டு போறோம்..இது அம்மா

என்ன அப்படி சொல்லிட்ட என் பேத்தி பேச போறா நா இல்லாமலா என்று பட்டு புடைவையில் என் பாட்டி..நல்ல வேளை தாத்த பட்டு வேட்டி எல்லாம் போடாமல் கதர் அணிந்திருந்தார்...ஆக பேச்சு போட்டிக்கு குடும்பத்தோட போன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.

போனவுடன் அனைவரையும் ஒரு வகுப்பில் அமரச் சொன்னார்கள். என்னை தவிர எல்லோரும் பள்ளி சீருடையில் இருந்தார்கள்.அம்மாவை நன்றாக முறைத்தேன்.

நடுவராக மூவர் வந்து அமர்ந்தார்கள். இத பாரு நீ முதல் பென்ச்சுல போயி உக்காரு. எல்லார் பேசரதயும் நல்லா கவனி. என்று அம்மா சொன்னவுடன் முதல் பென்ச்சில் போய் உட்கார்ந்தேன். அதுவரை இல்லாத பயம் திடிரென்று தொற்றிக் கொண்டது. எல்லோர் பேசுவதையும் கேட்டு அது இன்னும் அதிகமாகிவிட்டது. எங்கள் பள்ளி பெயரை அறிவித்கார்கள். எங்கள் பள்ளியில் இருந்து நானும் இன்னுமொரு மாணவியும் வந்திருந்தோம்.முதலில் அந்த மாணவி சென்று அடக்கமுடைமை பற்றி பேச எனக்குள் பயம் அடங்காமல் ஆடியது. கடைசியில் என் பெயரையும் அறிவித்துவிட்டார்கள்.

குறளில் என்னை கவர்ந்த குறள் எது என்பதை என் குரலில் கூறவே இங்கு வந்தேன் என தெம்பாய் ஆரம்பித்து தெரியாமல் என் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டேன்..அவ்வளவுதான் அதன் பின் ஒரு வார்த்தை கூட நினைவுக்கு வரவில்லை..அன்புடைமை பற்றி மறந்துவிட்டு என்னை கவர்ந்தது அடக்கமுடைமை என்று உளர...என் அம்மாவின் முகத்தில் கலவரம். அதன் பின்னர் ஒரு 2 நிமிடத்துக்கு அதாவது அதாவது என்று பேந்த பேந்த முழித்து பின்னர் அங்கேயே அழுது விட்டு மேடையில் இருந்து கீழெ இறங்கினேன்..

பரவாயில்லைம்மா அழாதே என்று நடுவர்கள் ஆறுதல் கூற...என் பட்டு பாவாடை வேறு..அது எல்லொருக்கும் என்னை நன்றாக அடையாளம் காட்டி விட்டது...
அப்புறம் என்ன..இதுக்கு மேல இனிமே அவமானப்பட முடியாது என்று தெரிந்ததால் அதன் பின்னர் அனைத்து பேச்சு போட்டியிலும் துளி கூட பயமே இல்லாமல் கலந்து கொண்டது வேறு கதை...!!! ஆனால் இந்த முதல் அனுபவம் மட்டும் என் பயத்தை போக்கியது உண்மை.

ஊரார் பிள்ளைய...

ஊரார் பிள்ளைய...

Photobucket - Video and Image Hosting
டேய்..அந்த உண்டிய வெச்சு என்ன பண்ணிட்டு இருக்க...

இல்லம்மா பாட்டி ஒரு தடவ கதை சொன்னன்ங்க. மத்த வீட்டு பசங்கள நாம பாத்துண்டா நம்ம வீட்டு பசங்களகடவுள் பாத்துப்பார்னு

அதுக்கு உண்டிய எதுக்கு உடைக்கறடா

அம்மா நீ திட்டினன்னு பாட்டி வீட்ட விட்டு போயிடிச்சு. அதான் கோவில் முன்னாடி ஒரு பாட்டி தினமும் அங்க வர்ரவங்ககிட்ட காசு கேப்பாங்க..அவங்களுக்கு கொண்டு போய் இந்த காசு போடபோறேன். அப்படி பண்ணா என் பாட்டிய சாமி பாத்துக்கும் இல்ல..

அங்கே உடைந்தது உண்டி மட்டும் அல்ல என் மனமும் தான்