சாரல் (1)

குடைக்குள் மழை

மழை வரும்போதெல்லாம்
குடை விரிப்பவன் நான்
சிறு தூரலோ பெரு மழையோ
என் குடை மலர்ந்து நிற்கும்



முகத்தில் சாரல் படர்கையில்
சிலிர்ப்பவர்களைப் பார்த்து சிரித்திரிக்கிரேன்
குடை விளிம்பில் வழியும் அருவியுடன்
விளயாடுபவர்களோ என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்


என் குடையிலிருப்பது
துருப்பிடித்த கம்பிகளும்
எப்போதோ வானம் மறைத்த
சில கருப்பு கிழிசல்களும்


மழை எல்லோருக்கும் பொது
இது என் குடை
என் குடைக்குள் விழும் மழை
என் மழை

சாரல்


மெலிதாய் ஒரு மழை...

ஜன்ன்லோர இருக்கையில் ஒரு பேருந்து பயணம்..

மழையின் சாரல் முகத்தில் சிலிர்க்க..

மனதில் ஒரு சுகம்...

அதே போன்ற உணர்வுதான் என் நண்பனின் படைப்புக்களை படிக்கையில் ..


அந்த படைப்புக்களை என் பதிவில் சாரல் என்ற தலைப்பில் வெளியிடுகிறேன்..


Keep Reading :)


கொலு வைக்கலையோ கொலு
______________________
நவராத்திரி என்றாலே ஒரு பெரிய சந்தோஷம். ஏன்னு கேக்கரீங்களா? இந்த ஒரு பண்டிகையத்தான் ஒன்பது நாள் கொண்டாடலாம். என் புகுந்த வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் கிடையாது. ஆனாலும் என் பிறந்த வீட்டில் இந்த பழக்கம் உண்டு என்பதால் திருமணத்திற்கு பின்னும் கொலு வைப்பதை நான் நிறுத்தவில்லை. என் மாமியாருக்கும் கொலு வைப்பது பிடித்திருந்ததால் ஒரே கொண்டாட்டம்தான்.

இப்ப நாங்க சிங்கைல இருப்பதாலே விமரிசையா ஒன்பது படி வைக்காட்டியும் இந்த முறை சற்று சிறியதாக வைத்துவிட்டோம்.

சரி அது இருக்கட்டும் இந்த கொலு வைக்கற சாக்கில் வீட்ல ஒரு களேபரம் நடக்கும் பாருங்க...அத பத்திதான் அடுத்து எழுதப்போரேன்.


இப்போதைக்கு அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்

ஆசிரிய தின வாழ்த்துக்கள்


எல்லோருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

வரும் தலைமுறையினர் இது போன்றதொரு ஆசிரியரை பார்க்காதிருக்கட்டும்.

இதைப் பார்த்த உடன், என் நண்பனது பதிவு ஒன்று ஞாபகம் வந்தது. அவர் இந்த மாதிரி நல்லாசிரியர்களிடம் மாட்டாம போயிட்டாரேன்ற ஒரே ஒரு குறை இருக்கு ;)

நண்பர பதிவுலகின் பக்கம் பாத்தே பல வருஷம் ஆச்சு... நட்சத்திரமானாத்தான் எழுத வர்றதுன்னு என்ன மாதிரியே எதுவும் விரதமா ;)

Labels:

நீங்களே சொல்லுங்க இது நெசமா?


என்னுடைய நண்பனொருவனுக்கு இன்று பிறந்தநாள். அவன அப்டி இப்டி திட்டி தாஜா பண்ணி ட்ரீட் கொடுக்க சொல்லி நட்சத்திர ரொட்டி (bucks க்கு ரொட்டின்னு ஒரு அர்த்தம் இருக்கு தெரியுமா? காசு-னு வச்சுக்கிட்டா கூட பெயர் பொருத்தம்தான்) காஃபிக்கடைக்கு கூட்டிட்டு போனேன்.

அங்க போய் ஆளுக்கொரு ஆளுயர கோப்பைல காஃபி சொல்லிட்டு வழக்கம் போல மாமியார்-மாமனார் பண்ற லொள்ளு, என் பொண்ணு படுத்துற பாடு, என் கணவன் பண்ணின அட்டூழியங்கள்னு சொந்தக் கதை சோகக் கதையா சொல்லிக்கிட்டு இருந்தேன். அப்ப அவன் சடார்னு ஒரு கருத்த சொல்லிட்டுப் போயிட்டான். இத்தனைக்கும் புலம்பும்போதும் அவங்கள பத்தி உள்ள நல்லதெல்லாம் சொல்லி புலம்பற ஆளுங்க நான்.

ஏண்டான்னு கேட்டா பெரிசா ஒரு விளக்கம் வேற குடுத்தான். அவன் சொல்றதுல உண்மை இருக்கான்னு உங்ககிட்ட கேக்காம வேற யார்ட்ட கேக்றது. நீங்களே சொல்லுங்க 'கல்யாணமான பின்னால ஆண்-பெண் நட்பு விட்டுப் போறதுக்கு இல்ல சின்ன விரிசல் விழறதுக்கு இந்தப் புலம்பலா காரணம்'?

அவன் என்ன விளக்கம் கொடுத்தான்னு கேக்கறீங்களா?

நானும் இதே அட்டூழியங்கள்லாம் என் மனைவிகிட்ட செய்றேன், எங்க வீட்லயும் இதே பிரச்னை பல ரூபங்கள்ல அலைஞ்சுகிட்டு இருக்கு. அதுனால உன் கதைய கேட்டா ஏதோ எந்'தங்கமணி'யே உன்கிட்ட புலம்பி அவருக்கு கொஞ்சம் நல்ல புத்தி சொல்லுங்கன்னு சொல்லி நீ புத்தி சொல்ற மாதிரியே இருக்குன்றான்!

நீங்களே சொல்லுங்க இது நெசமா?

இனிது இனிது


முதலில் அனைவருக்கும் விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...

இன்று காலையில் இருந்தே எங்கள் வீட்டில் பட்டிமண்டபம்தான்...
என் கணவர் தெலுங்கு..நான் தமிழ்....அதனால் விநாயக சதுர்த்திக்காக தமிழ் பாடல் போடுவதா...தெலுங்கு பாடல் போடுவதா..என ஒரு சிறு ஊடல்...

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்..என நானும்...

சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என என் கணவர்...

தமிழ் இனிதா...தெலுங்கு இனிதா...என்று நாங்கள் பேசிகொண்டிருக்க....

என் ஒரு வயதே நிரம்பிய மகள்...அம்மா..என்று குரல் குடுக்க...

அந்த மழலையின் குரல் கேட்ட பின்னர்..ஊடலாவது ஒண்ணாவது...

இதைத்தான் சொன்னாரோ வள்ளுவர்
"குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலை சொல் கேளாதவர்"

தீ நகர்



ஹாய் மதன்: கேள்வி பதில்
விக்கிரமாதித்தன், ஜேடர்பாளையம்.
இந்தியாவில் உள்ள பெரிய குறை என்ன?
மக்களின் அசாத்தியப் பொறுமை!

நான் சொல்ல வந்த செய்தி என்னமோ மேலேயே முடிந்து விட்டது. இருந்தாலும் சமூக அக்கறை உள்ள இரண்டே இரண்டு பெயர்களை குறிப்பிட்டாக வேண்டுமென்ற ஒரே நோக்கில்...

எம்.ஏ.ஜவஹர் இதே தலைப்பில்,ஜூனியர் விகடனில் கோபசாரியின் டைரியிலிருந்து என்ற பகுதியில் இந்த வருட ஆரம்பத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். வழக்கம் போல் செவிடம் காதில் ஊதிய சங்கானது. நெருப்புன்னா வாய் வெந்துராது என்பார்கள்... ஆனால் அன்னைக்கு நெருப்புன்னு சொன்னது இன்னிக்கு வெந்து தணிஞ்சுருக்கு!

அடுத்ததா டிராஃபிக் ராமசாமி, சமீபத்தில கருணாநிதிய எதிர்த்து ஜெயிலுக்கெல்லாம் போனாரே அவர்தான், அவரும் இது விஷயமா ஒரு வழக்கு போட்டாரு. அது தலைல கல்லப் போடு இல்ல கமிஷனப் போடுன்ற பாணியில அந்த வழக்கு இன்னும் தூங்குது!

பி.கு: மேலே சொன்ன விகடன் முகவரி எடுப்பதற்காக போனால் ஓடும் வரிச் செய்தியில் கீழ் கண்ட வாசகம்...

சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து: விதிமுறைகளின்படி கட்டியிருந்தால் இழப்பு ஏற்பட்டிருக்காது:முதலமைச்சர் கருணாநிதி கருத்து

தலைல அடிச்சுக்கிட்டேன்... என் கேள்வியெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான் முதலமைச்சர் கருத்தின் அடிப்படையில் உங்களுக்கு இழப்பீடு கிடையாது என்று இன்ஷ்யூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லுமா? ஒருவேளை மேலே இரண்டு பேர் செய்ய நினைத்ததை இது செய்யலாம்!

அது சரி... நாம் மெய்யாலுமே அசாத்தியப் பொறுமைசாலிங்கதானோ...

வால்-இ - திரைப்பார்வை


குசேலன், சத்யம், தாம் தூம்... என்று நம் படங்கள் தொடர்ந்து சோதிக்க சென்ற வெள்ளிக் கிழமை (wall-E) வால்-இ என்ற ஆங்கிலப் படத்திற்கு சென்றோம். ஆங்கிலப் படமென்றால் பொதுவாக விமர்சனங்களைப் படித்துவிட்டு முழுக் கதையையும் தெரிந்த பின்னே செல்வது வழக்கம். மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?

ஆனால் வால்-இ விஷயத்தில் தலையும் புரியாமல் 'வால்'-ம் புரியாமல் போய் உக்காந்தாச்சு. பிக்ஸர் நிறுவனத்தின் மேல் நம்பிக்கை இருந்தது வேறு விஷயம். வழக்கம்போல் இந்த முறையும் குடுத்த காசுக்கு குறை வைக்கவில்லை... இல்லை இல்லை மேலே சொன்ன எல்லா தமிழ் படங்களில் விட்ட காசக் கூட திருப்பி கொடுத்து விட்ட திருப்தி.

உலகம் அழிந்த பின்னர் வரும் ஒரு மயான அமைதியுடன் ஆரம்பிக்கிறது படம், வானுயர்ந்த கட்டிடங்கள் வழியாக பயனிக்கும் கேமரா அருகே செல்ல செல்ல உயர்ந்த கட்டிடங்கள் அனைத்தும் குப்பைகள் என்று தெரிய வரும்போது வரும் அதிர்ச்சியை தவிர்க்க முடியவில்லை. குப்பைகள் அதிகம் சேர்ந்து மனித இனமே வாழ இயலாத அளவுக்கு, கிபி 2700ம் ஆண்டு பூமி மாறி விடுகிறது.

வால்-இ என்ற ஒரே ஒரு ரோபோ மட்டும் பூமியில் குப்பைகளை பிரித்து அமுக்கி செங்கலாக்கி அடுக்கி வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. சதுர தகரத்தில் உடம்பும், முட்டை முட்டையாய் இரண்டு பைனாகுலர் கண்ணுமாய் முதல் பார்வையிலேயே மனத்திற்கு இனக்கமாகி விட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு வசனங்களே கிடையாது. மொத்தப் படத்திற்கான வசனத்தை ஒரு பாக்கட் நாவல் பக்கத்தில் எழுதிவிடலாம்.

வால்-இ, குப்பைகளை பிரிக்கையில் கண்ணில் படும் விளையாட்டு சாமான்களை பத்திரப்படுத்தும் போது நமக்கு நெருங்கிய நண்பனாகி விடுகிறது. குப்பை மேட்டில் ஒரே ஒரு செடியைப் பார்த்து அதை ஒரு பிய்ந்த காலணியில் வைத்து தண்ணீர் ஊற்றி வளரச் செய்யும் அழகே அழகு. பின்னர் அதை விட தொழில்நுட்பத்தில் சிறந்த ரோபோ ஒன்று வேறு கிரகத்திலிருந்து வருகிறது. முதலில் பயந்து ஒளியும் வால்-இ, அது மின்சாரம் தாக்கி செயலிளக்கும் போது உதவ இரண்டும் நெருக்கமாகி விடுகின்றன.

வால்-இ என்றும் ஈவா என்றும் இரண்டும் மாற்றி மாற்றி அழைக்க அது இந்த வருடத்தின் மிகச் சிறந்த காதல் வசனமாகி விடும் அனுபவத்தை நீங்களே நேரில் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். (என் அலைபேசியின் அழைப்பொலி வால்-இ-ஈவா தான்!) பழைய காதல் பாடலொன்றை தொலைக் காட்சியில் பார்த்து, வால்-இ ஈவாவின் விரல்களைப் பற்றும் ஆசையில் நெருங்கி அது கைகூடாத தருணங்களில் நாம் பார்ப்பது ரோபோக்கள் என்ற உணர்வே வருவதில்லை. ஆகச் சிறந்த ஒரு காதல் ஜோடியின் மிகச் சிறந்த தருணங்களை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது.

வால்-இ ஈவாவுக்கு அந்த செடியை காதல் பரிசாக அளிக்கிறது. பின் அதுவே வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பூமி மறுபடியும் உயிர் இருப்பதற்கான சாட்சியமாகிறது. மனிதர்கள் தன் தாய்மண் தேடி வந்தார்களா? வால்-இ, ஈவாவின் விரல்கள் இணைந்தனவா? என்பதை மிக மிக சுவைபட கூறியிருக்கும் Andrew Stanton ஆன்ட்ரூ ஸ்டேண்டன்க்கும், இந்த இரண்டு ரோபோக்களின் குரல்களை உருவாக்கிய Ben Burtt பென் பர்ட்-க்கும் பாராட்டுக்கள்.

அய்யய்யோ முழு கதையையும் சொல்லி உங்கள் பார்க்கும் அனுபவத்தை கெடுத்து விடப் போகிறேன். மொத்ததில் இந்தப் படம் பார்த்து முடிக்கும் பொழுது இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகளுடன் சிரித்துக் கொண்டு வெளியேறுவீர்கள், உங்களது காதலன்/காதலி/கணவன்/மனைவியை இன்னும் கொஞ்சம் காதலாய் பார்ப்பீர்கள், மக்கும்/மக்காத குப்பையை கவனமாக பிரித்துப் போடுவீர்கள், ஒரே ஒரு செடியாவது வைத்து தண்ணீர் ஊற்றும் ஆசை அதிகரித்து இருக்கும், வாய்ப்பு வசதி இருக்கிற மவராசனுங்க அதையும் செஞ்சுருப்பீங்க! Gudos Pixar!

Labels: , , ,

*அட நான் கூட...



கல்யாணம் பண்ணிப் பார்... வீட்டை கட்டிப் பார்... குழந்தை பெத்துட்டு blog எழுதிப் பார்-னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. குழந்தை பிறந்ததற்கு அப்புறம் கொஞ்சம்னா கொஞ்சம் கூட நேரமே இல்ல, இந்த சமயம் பாத்து நீங்க நட்சத்திரப் பதிவாளரா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள் ஒரு மடல் வந்தா சிரிப்பீங்களா அழுவீங்களா?

ஆனா இந்த வாய்ப்பைக் கூட விட்டுவிட்டால் நான் மறுபடியும் பதிவுலகம் பக்கம் வருவதே சந்தேகத்துக் குறியதாகி விடும் என்ற ஒரே காரணத்திற்காக எழுத முயற்சிக்கிறேன். என்வே குறை குற்றங்களை பொறுத்தருள்க.

அப்பப்ப வந்து வலைப்பூக்கள வேடிக்கை பார்க்கிறதோட சரி, தமிழ்-ல எழுதியே பல காலம் ஆச்சு. அதுனால என்னடா நட்சத்திரப் பதிவே இப்படி மொக்கப் பதிவா இருக்குன்னு யாரும் நினைக்காம கொஞ்சம் ஆதரவு தாங்க இந்த வார இறுதிக்குள் ஒரே ஒரு நல்ல பதிவாவது போட்டுவிடுவேன்.

தமிழ்மண நிர்வாகிகளுக்கும் நான் நட்சத்திரமாக தேர்வாக இருந்த எல்லா காரணிகளுக்கும் மிக்க நன்றி! மீண்டும் ஒரு முறை 'அ' எழுத உதவியதற்கு!

Labels: ,

அட நான் கூடவா...


சில வருடங்களுக்கு முன் குழந்தைகள் உள்ள உறவினர் வீட்டுக்கோ அல்லது நண்பர்கள் வீட்டுக்கோ சென்றால் அவர்கள் அந்த குழந்தையை அத சொல்லி காமி இது பண்ணி காமி என்று படுத்தும் பாட்டை பார்த்தால் பாவமாக இருக்கும்...என்னம்மா இது மனசாட்சியே இல்லாம சின்ன குழந்தையை கஷ்ட படுத்தறாங்க என்று அலுத்துக்கொண்டுள்ளேன்...
இன்று...
அம்மா..என் பொண்ணு இப்பவே எல்லாருக்கும் டாட்டா காமிக்கரா பாரு
இதோ என் 8 மாத குழந்தையை டாட்டா காமி என்று படுத்திக் கொண்டிருக்கிறேன்..
சே நான் கூட...:(

முதல் முதலாய்...

முதல் முதலாய்...(1)
Photobucket - Video and Image Hosting

இது கண்டிப்பா லேசா லேசா பாட்டு இல்லீங்க.
முதல் முதலாய் நிகழும் சில அனுபவங்கள் மறக்க முடியாதவை...
முதல் முதலா மேடைல பேசின அனுபவம்தான் இது.


அப்ப 6வது படிச்சிட்டு இருந்தேன். அது வரைக்கும் பேச்சு போட்டில எல்லாம் சேந்ததே கிடையாது. புது பள்ளிகூடம் வேற.ஸ்கூலுக்கு போகும்போதே அம்மாவோட அறிவுரை..பாருமா நல்ல படிச்சா மட்டும் போதாது எல்லா போட்டியிலும் சேரணும் நிறைய பரிசு வாங்க்கணும்னு. அதுக்கு ஏத்த மாதிரி பல பள்ளி மாணவர்களும் கலந்துக்கர ஒரு பேச்சு போட்டில முதல் ஆளா பேர குடுத்துட்டேன். போட்டி வர்ற சண்டே அதுவும் பத்மா சேஷாத்ரிலன்னு சொன்னாங்க.தலைப்பு - என்னை கவர்ந்த குறள்.
வீட்டுக்கு போனதும் அம்மா,அப்பா,பாட்டி,தாத்தா..எல்லார் கிட்டயும் இத பத்தி பெருமையா சொல்லிட்டேன்.
சரி இப்ப எனக்கு யாரு எழுதி தரப்போறிங்க..
உனக்கு பிடிச்ச குறள்னுதானே தலைப்பு..அப்ப நீதானெ எழுதணும் என்று இந்த ஒரு விஷயத்தில் குடும்பமே ஒத்துமையாய் இருக்க வேறு வழியில்லாமல் தமிழ் ஆசிரியை அன்றைய வகுப்பில் எடுத்த அன்புடைமையில் எனக்கு பிடித்த ஒரு குறளை பற்றி எழுதி படித்தும் விட்டேன். பின்னர் தினமும் கண்ணாடி முன் நின்று பேசிப்பாத்து ஒரே கொண்டாட்டம்தான்.
கடைசியில் அந்த பொன்நாளும் வந்தது.


நான் என்ன சொல்லியும் கேக்காமல் முதல் தடவ மேடையில பேச போற அதனால பட்டு பாவாடை சட்டைதான் போடணும்னு சொல்லி...கிட்டதட்ட ஒரு நடனப் போட்டி போற மாதிரி தயாரானேன்.
அப்பா நீங்க என்னை பள்ளியில விட்டுட்டு போயி ஒரு 1 மணி நேரம் கழிச்சி திரும்பி வந்து கூட்டிட்டு போங்க என்றேன்.
போடி முதல் தடவ மேடைல பேச போற நான் அப்பா ரெண்டு பேரும் வந்து நீ பேசி முடிக்கரவரைக்கும் இருந்து உன்னை கூட்டிட்டு போறோம்..இது அம்மா

என்ன அப்படி சொல்லிட்ட என் பேத்தி பேச போறா நா இல்லாமலா என்று பட்டு புடைவையில் என் பாட்டி..நல்ல வேளை தாத்த பட்டு வேட்டி எல்லாம் போடாமல் கதர் அணிந்திருந்தார்...ஆக பேச்சு போட்டிக்கு குடும்பத்தோட போன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்.

போனவுடன் அனைவரையும் ஒரு வகுப்பில் அமரச் சொன்னார்கள். என்னை தவிர எல்லோரும் பள்ளி சீருடையில் இருந்தார்கள்.அம்மாவை நன்றாக முறைத்தேன்.

நடுவராக மூவர் வந்து அமர்ந்தார்கள். இத பாரு நீ முதல் பென்ச்சுல போயி உக்காரு. எல்லார் பேசரதயும் நல்லா கவனி. என்று அம்மா சொன்னவுடன் முதல் பென்ச்சில் போய் உட்கார்ந்தேன். அதுவரை இல்லாத பயம் திடிரென்று தொற்றிக் கொண்டது. எல்லோர் பேசுவதையும் கேட்டு அது இன்னும் அதிகமாகிவிட்டது. எங்கள் பள்ளி பெயரை அறிவித்கார்கள். எங்கள் பள்ளியில் இருந்து நானும் இன்னுமொரு மாணவியும் வந்திருந்தோம்.முதலில் அந்த மாணவி சென்று அடக்கமுடைமை பற்றி பேச எனக்குள் பயம் அடங்காமல் ஆடியது. கடைசியில் என் பெயரையும் அறிவித்துவிட்டார்கள்.

குறளில் என்னை கவர்ந்த குறள் எது என்பதை என் குரலில் கூறவே இங்கு வந்தேன் என தெம்பாய் ஆரம்பித்து தெரியாமல் என் அம்மாவையும் அப்பாவையும் பார்த்து விட்டேன்..அவ்வளவுதான் அதன் பின் ஒரு வார்த்தை கூட நினைவுக்கு வரவில்லை..அன்புடைமை பற்றி மறந்துவிட்டு என்னை கவர்ந்தது அடக்கமுடைமை என்று உளர...என் அம்மாவின் முகத்தில் கலவரம். அதன் பின்னர் ஒரு 2 நிமிடத்துக்கு அதாவது அதாவது என்று பேந்த பேந்த முழித்து பின்னர் அங்கேயே அழுது விட்டு மேடையில் இருந்து கீழெ இறங்கினேன்..

பரவாயில்லைம்மா அழாதே என்று நடுவர்கள் ஆறுதல் கூற...என் பட்டு பாவாடை வேறு..அது எல்லொருக்கும் என்னை நன்றாக அடையாளம் காட்டி விட்டது...
அப்புறம் என்ன..இதுக்கு மேல இனிமே அவமானப்பட முடியாது என்று தெரிந்ததால் அதன் பின்னர் அனைத்து பேச்சு போட்டியிலும் துளி கூட பயமே இல்லாமல் கலந்து கொண்டது வேறு கதை...!!! ஆனால் இந்த முதல் அனுபவம் மட்டும் என் பயத்தை போக்கியது உண்மை.