வால்-இ - திரைப்பார்வை

குசேலன், சத்யம், தாம் தூம்... என்று நம் படங்கள் தொடர்ந்து சோதிக்க சென்ற வெள்ளிக் கிழமை (wall-E) வால்-இ என்ற ஆங்கிலப் படத்திற்கு சென்றோம். ஆங்கிலப் படமென்றால் பொதுவாக விமர்சனங்களைப் படித்துவிட்டு முழுக் கதையையும் தெரிந்த பின்னே செல்வது வழக்கம். மொழி தெரியாத இடத்துல போய் கழுத்துல வெட்டு வாங்கக் கூடாது இல்லிங்களா?
ஆனால் வால்-இ விஷயத்தில் தலையும் புரியாமல் 'வால்'-ம் புரியாமல் போய் உக்காந்தாச்சு. பிக்ஸர் நிறுவனத்தின் மேல் நம்பிக்கை இருந்தது வேறு விஷயம். வழக்கம்போல் இந்த முறையும் குடுத்த காசுக்கு குறை வைக்கவில்லை... இல்லை இல்லை மேலே சொன்ன எல்லா தமிழ் படங்களில் விட்ட காசக் கூட திருப்பி கொடுத்து விட்ட திருப்தி.
உலகம் அழிந்த பின்னர் வரும் ஒரு மயான அமைதியுடன் ஆரம்பிக்கிறது படம், வானுயர்ந்த கட்டிடங்கள் வழியாக பயனிக்கும் கேமரா அருகே செல்ல செல்ல உயர்ந்த கட்டிடங்கள் அனைத்தும் குப்பைகள் என்று தெரிய வரும்போது வரும் அதிர்ச்சியை தவிர்க்க முடியவில்லை. குப்பைகள் அதிகம் சேர்ந்து மனித இனமே வாழ இயலாத அளவுக்கு, கிபி 2700ம் ஆண்டு பூமி மாறி விடுகிறது.
வால்-இ என்ற ஒரே ஒரு ரோபோ மட்டும் பூமியில் குப்பைகளை பிரித்து அமுக்கி செங்கலாக்கி அடுக்கி வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. சதுர தகரத்தில் உடம்பும், முட்டை முட்டையாய் இரண்டு பைனாகுலர் கண்ணுமாய் முதல் பார்வையிலேயே மனத்திற்கு இனக்கமாகி விட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு வசனங்களே கிடையாது. மொத்தப் படத்திற்கான வசனத்தை ஒரு பாக்கட் நாவல் பக்கத்தில் எழுதிவிடலாம்.
வால்-இ, குப்பைகளை பிரிக்கையில் கண்ணில் படும் விளையாட்டு சாமான்களை பத்திரப்படுத்தும் போது நமக்கு நெருங்கிய நண்பனாகி விடுகிறது. குப்பை மேட்டில் ஒரே ஒரு செடியைப் பார்த்து அதை ஒரு பிய்ந்த காலணியில் வைத்து தண்ணீர் ஊற்றி வளரச் செய்யும் அழகே அழகு. பின்னர் அதை விட தொழில்நுட்பத்தில் சிறந்த ரோபோ ஒன்று வேறு கிரகத்திலிருந்து வருகிறது. முதலில் பயந்து ஒளியும் வால்-இ, அது மின்சாரம் தாக்கி செயலிளக்கும் போது உதவ இரண்டும் நெருக்கமாகி விடுகின்றன.
வால்-இ என்றும் ஈவா என்றும் இரண்டும் மாற்றி மாற்றி அழைக்க அது இந்த வருடத்தின் மிகச் சிறந்த காதல் வசனமாகி விடும் அனுபவத்தை நீங்களே நேரில் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். (என் அலைபேசியின் அழைப்பொலி வால்-இ-ஈவா தான்!) பழைய காதல் பாடலொன்றை தொலைக் காட்சியில் பார்த்து, வால்-இ ஈவாவின் விரல்களைப் பற்றும் ஆசையில் நெருங்கி அது கைகூடாத தருணங்களில் நாம் பார்ப்பது ரோபோக்கள் என்ற உணர்வே வருவதில்லை. ஆகச் சிறந்த ஒரு காதல் ஜோடியின் மிகச் சிறந்த தருணங்களை பார்க்கும் உணர்வே மேலோங்குகிறது.
வால்-இ ஈவாவுக்கு அந்த செடியை காதல் பரிசாக அளிக்கிறது. பின் அதுவே வேற்று கிரகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு பூமி மறுபடியும் உயிர் இருப்பதற்கான சாட்சியமாகிறது. மனிதர்கள் தன் தாய்மண் தேடி வந்தார்களா? வால்-இ, ஈவாவின் விரல்கள் இணைந்தனவா? என்பதை மிக மிக சுவைபட கூறியிருக்கும் Andrew Stanton ஆன்ட்ரூ ஸ்டேண்டன்க்கும், இந்த இரண்டு ரோபோக்களின் குரல்களை உருவாக்கிய Ben Burtt பென் பர்ட்-க்கும் பாராட்டுக்கள்.
அய்யய்யோ முழு கதையையும் சொல்லி உங்கள் பார்க்கும் அனுபவத்தை கெடுத்து விடப் போகிறேன். மொத்ததில் இந்தப் படம் பார்த்து முடிக்கும் பொழுது இரண்டு சொட்டு கண்ணீர்த் துளிகளுடன் சிரித்துக் கொண்டு வெளியேறுவீர்கள், உங்களது காதலன்/காதலி/கணவன்/மனைவியை இன்னும் கொஞ்சம் காதலாய் பார்ப்பீர்கள், மக்கும்/மக்காத குப்பையை கவனமாக பிரித்துப் போடுவீர்கள், ஒரே ஒரு செடியாவது வைத்து தண்ணீர் ஊற்றும் ஆசை அதிகரித்து இருக்கும், வாய்ப்பு வசதி இருக்கிற மவராசனுங்க அதையும் செஞ்சுருப்பீங்க! Gudos Pixar!
Labels: ஈவா, பிக்ஸர், வால்-இ, வால்-டிஸ்னி